வர்ணனையைக் காட்சிப்படுத்துவோம்
ஓவியப் போட்டி
19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கானப் போட்டி
இயற்கையும் பூங்குழலியின் கானத்தை ரசிக்க அமைதியானதோ!! கோடியக்கரையின் அந்தி நேர அழகினை, அமரர் கல்கியின் அற்புதமான வர்ணனையை காட்சி படுத்துவோம்!!
செப்டம்பர் 19 இல் பதிவேற்ற இணைப்பு வழங்கப்படும்.
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது. காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள் அசையவில்லை. நாலா பக்கமும் நிசப்தம் நிலவியது. செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும் இடத்தை நோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.
கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவது போல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர் இளம் பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததும் சேந்தன் அமுதன் தன் மாமன் மகளைக் குறித்து வர்ணனை செய்தது நமக்கு நினைவு வருகிறது. ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?
இசையால் வசப்படுத்துவோம் போட்டி
19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கானப் போட்டி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாடலின் வரிகளை உங்கள் வசீகர குரலில் பாடி அதன் காணொளியை பதிவிட வேண்டும்.
சிறந்த குரல் வளம் உடையவர்களுக்குச் சிலம்பு இசைக் குழுவில் இணைந்து தமிழ் இலக்கியங்களை இசையாக வெளியிடும் பணியில் திறமையை காட்ட வாய்ப்புகள் தரப்படும்.
சோழம் சோழம்!
வில்லும் கல்லும் பணிந்திட
மச்சம் அச்சம் விலகிட
தீவும் தீதும் நடுங்கிட
பணிந்திட, விலகிட, நடுங்கிட
சோழம் சோழம்!
குடியும் மடியும் நிறைந்திட
யுக்தி புத்தி திகழ்ந்திட
கோலும் நூலும் உயர்ந்திட
நிறைந்திட, திகழ்ந்திட, உயர்ந்திட
சோழம் சோழம்!
பாடலுக்கான மெட்டு (with vocals)
பாடலுக்கான மெட்டு (without vocals)
மெட்டுக்குப் பாட்டு
19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கானப் போட்டி
மேலே கொடுக்கப்பட்டுள்ள சந்தத்திற்குப் (refer பாடலுக்கான மெட்டு section above) போட்டியாளர்கள் தங்கள் செழுமையான தமிழ் சொற்களில் பாடல் இயற்ற வேண்டும்.
பாடல் வரிகளை pdf கோப்பாக அக்டோபர் 6 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 23 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
சிறந்த மொழி நடை உடையவர்களுக்குச் சிலம்பு இசைக் குழுவில் இணைந்து தமிழ் இலக்கியங்களை இசையாக வெளியிடும் பணியில் திறமையை காட்ட வாய்ப்புகள் தரப்படும்.
மாறு வேடம் புனையும் போட்டி
வயது 3 முதல் 7 வரை
செப்டம்பர் 19 இல் பதிவேற்ற இணைப்பு வழங்கப்படும்
கரு – பொன்னியின் செல்வன் மையக் கதாப் பாத்திரங்களை வெளிப்படுத்தும் ஒப்பனை.
ஒரு நிமிடத்திற்கு மிகாத காணொளியை சிலம்பு வலைப்பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒளிப்பதிவில் ஒப்பனை செய்யப்பட்ட கதாப்பாத்திரத்தின் பெயரை போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். அக்டோபர் 6க்குள் ஒலி மற்றும் ஒளிப்பதிவை பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
ஓவியப் போட்டி
வயது 8 முதல் 12 வரை
செப்டம்பர் 19 இல் பதிவேற்ற இணைப்பு வழங்கப்படும்
தலைப்பு – சோழர் கொடி பறக்கிறது
ஓவியம் வரைந்து அதற்குத் தகுந்த வாசகம் ஒன்றைத் தமிழில் எழுத வேண்டும்.
ஓவியத்தைப் பதட்டம் இல்லாமல் நிதானமாக புகைப்படம் எடுத்து அக்டோபர் 2க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 6 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
தமிழ் வாசிப்போம் போட்டி
வயது 13 முதல் 15 வரை
செப்டம்பர் 19 இல் பதிவேற்ற இணைப்பு வழங்கப்படும்.
வந்தியத்தேவன் கண்டு வியந்த சோழ நாட்டின் வளங்கள் குறித்த அமரர் கல்கியின் வரிகளை மாணவச் செல்வங்கள் பிழையின்றி ஏற்ற இறக்கங்களுடன் ஒரு நிமிடத்திற்கு மிகாமல் வாசித்து அதன் காணொளியை இங்கு பதிவிட வேண்டும்.
பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும்,
வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள்.
குறுஞ்சொல்லாடல் போட்டி
வயது 16 முதல் 18 வரை
செப்டம்பர் 19 இல் பதிவேற்ற இணைப்பு வழங்கப்படும்
"சோழர்களும் தமிழக பெருமையும்"
என்ற தலைப்பில் 2-3 நிமிடங்கள் பேசி காணொளியை அக்டோபர் 6க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 23 ஆம் தேதியன்று வெளியிடப்படும்